தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. முதல்வரின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநில எல்லையில் உள்ள 7 மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தொலைபேசியில் அழைத்து கேட்பவர்களுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் எந்த பழமாக இருந்தாலும் தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.