தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.