மாட்டு கொட்டகையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் அட்டையை அவர் மாற்ற முயன்ற போது திடீரென்று செல்வராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.