உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் இந்த சம்பவத்தால் காயமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மைன்புரி மாவட்டத்தில் மட்டும் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் 08 கால்நடைகளும் இறந்துள்ளன. இந்த தகவல் அனைத்தையும் மாநில நிவாரண ஆணையர் தெரிவித்தார். இந்த பயங்கர சூறாவளியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சூறாவளியில் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.