பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியான 150 மீட்டர் நீள சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதையை கண்டுபிடிப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்வதேச எல்லையான போமியான் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப் பாதையின் மறுமுனையானது பாகிஸ்தான் பகுதியில் முடிவடைகிறது. இதனையடுத்து பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வால் போன்ற அதிகாரிகள் நேரில் சென்று அந்த சுரங்கப் பாதையை பார்வையிட்டனர். இதுகுறித்து ஜம்வால் கூறும்போது, கடந்த 6 மாதங்களில் சம்பா, கதுவா போன்ற மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டதில் இது மூன்றாவது சுரங்கப்பாதை ஆகும்.
இந்த சுரங்கப்பாதையானது பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ வசதியாக உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதைக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த சுரங்கப் பாதையானது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாகிஸ்தானின் ஷாகேர்கர் பகுதியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள மணல் மூட்டைகளில் 2016-2017 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்ட ஆண்டும் அதுவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் விசாரணை முடிவடைந்த பின்பு தான் இது புதிதாக கட்டப்பட்டுள்ளதா அல்லது கடந்த ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதா என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார். மேலும் சமீப காலங்களில் இந்திய ராணுவம் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் தீவிரமாக உள்ளதால், இந்த சுரங்கப்பாதை வழியாக பயங்கரவாதிகள் தற்போது ஊடுருவ வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அதோடு தீவிரவாதிகளை காஷ்மீரில் ஊடுருவ செய்வதற்கு பாகிஸ்தான் சதி செய்கிறது என்றும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதால் பாகிஸ்தானின் சதிகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.