தமிழகத்தில் இந்த மாதம் மட்டுமல்லாமல் அடுத்த மாதம் வரை மழை கொட்டி தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். கன மழை எப்போது வரை நீடிக்கும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் பருவமழை முடிவுக்கு வராமல் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது குளிர் காலமே இல்லை என்ற சூழல் காணப்படுகிறது. வருகின்ற 17ஆம் தேதிக்கு பிறகு மழையின் அளவு குறையும். பின்னர் வறண்ட வானிலை நிலவும். இதனையடுத்து மீண்டும் மழை தொடங்கும். இது ஜனவரி மாத இறுதி முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். தற்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மழை பொழிவது வரலாறு காணாதது. இந்த மாதம் மட்டுமல்லாமல் அடுத்த மாதம் வரை மழை கொட்டி தீர்க்க போகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.