சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்த குற்றத்திற்காகவும், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காகவும் 11 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ரவி என்பவர் தனது வீட்டின் பின்னால் கஞ்சா பொட்டலங்களை புதைத்து வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.