பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து இந்திய வம்சாவளியை தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14 வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் ஜெய் கிஷான் பந்து வீசினார். அப்போது வார்னர் அடித்த பந்து நேராக சென்று ஜெய் கிஷான் தலையை பலமாக தாக்கியது.
இதில் அவர் வலி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து மருத்துவ குழுவினர் மைதானத்திற்குள் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர், தலை கடுமையாக வலிக்கிறது என்று கூறியதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியிலும், சோகத்திலும் வார்னர் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தார். பயப்படும் அளவிற்கு காயம் இல்லை என்று தகவல் அறிந்த பிறகு வார்னர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அடிபட்ட ஜெய் கிஷான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.