பினாமி பெயரில் சொத்து அல்லது வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது புகார் அளித்தால் பரிசு கொடுக்கப்படும் என வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்தியா அல்லது வெளிநாடு என வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள், வருமான வரி ஏய்ப்பு, பினாமி பெயரில் சொத்து போன்ற குறிப்பிட்ட தகவல்களை கொடுப்பவர்களுக்கு மத்திய வருமான வரித்துறையினர் பரிசுத் தொகையாக 5 கோடி ரூபாய் வரை கொடுக்க உள்ளனர். இதற்காக இந்த வாரத்தின் தொடக்கத்தில் CBDT தனது வெப்சைட்டில் புதிதாக இ-போர்டல் ஒன்றை தொடங்கியுள்ளது.
அதில் புகார்களை கொடுக்கும் பட்சத்தில் அதன் உண்மை தன்மையை பொருத்து பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பினாமி சொத்து தொடர்பாக புகார் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரையும் வருமான வரி ஏய்ப்பு பற்றிய சரியான தகவல்களுக்கு 5 கோடி ரூபாய் வரையும் கொடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் புகார் அளிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
அதேநேரம் தவறான தகவல் கொடுப்பது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும். புகார் அளிக்க விரும்புபவர்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற லிங்கை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் கீழே இடது மூலையில் அமையப்பெற்றிருக்கும் Submit Tax Evasion Petition அல்லது Benami Property Holding என்பதை தேர்வு செய்து புகார் அளிக்கலாம். உங்கள் புகார்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதற்கு சரியான சன்மானம் வழங்கப்படும் என வருமான வரி துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.