கடனை திருப்பி செலுத்த முடியாததால் வெங்காய வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது தொழில் தேவைக்காக பல தனி நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை அவர் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கவே கிருஷ்ணமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் ஒவ்வொரு ஊராக சென்று வந்த அவர் கடந்த 29ம் தேதி கோவையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணமூர்த்தியின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் பூட்டிக்கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது அறைக்குள் கிருஷ்ணமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.