மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகத்திற்கு இன்று வருகை தருகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். கர்நாடகத்திற்கு வருகை தரும் அமித்ஷாவை வரவேற்பதற்காக முதல் மந்திரி எடியூரப்பா உட்பட பல்வேறு மந்திரிகள் வரவேற்க உள்ளனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி பகுதிக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்பு அதிவிரைவு படை பிரிவை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அதற்கு பிறகு மீண்டும் பெங்களூருக்கு வரும் அவர் விதான சவுதாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்கும் அமித்ஷா நாளை பாகல்கோட்டையிள் குழும நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அதை முடித்துக் கொண்டு அவர் பெலகாவி மருத்துவ கல்லூரியில் நடைபெறும் உயர்தர பயிற்சி மைய தொடக்க விழாவில் கலந்து கொள்வார்.
அதன் பின்னர் அமித்ஷா மறைந்த ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவிருக்கிறார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அமித்ஷா வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.