மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சுற்று பயணம் முடிவடைந்த பிறகே புதிதாக பதவியேற்ற 7 மந்திரிகளுக்கும் துறை ஒதுக்கப்படும் என்று முதல் மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் மந்திரிசபை இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர் . ஆனால் அந்த 7 பேருக்கும் இன்னும் துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் 2 நாள் சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகே புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு துறை ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, “தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் கர்நாடகாவில் அதிகளவில் நடை பெற்று வருகிறது. நிதின் கட்காரி அந்தத் துறையின் மந்திரியாக நியமிக்கப்பட்ட பிறகு கடந்த 30 ஆண்டுகளில் நடைபெறாத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவருக்கு நான் எனது பாராட்டை தெரிவிக்கிறேன்.தேசிய நெடுஞ்சாலை தொடர்பாக பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு நிதின் கட்காரியிடம் கேட்டுள்ளோம்.
அதற்கு அனுமதி அளிப்பதாக அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகத்திற்கு வருகை தர இருக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கிறேன். அவரது 2 நாள் சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகு புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.