கொரோனா தடுப்பூசி போடு முகாமை நாடு முழுவதும் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மதுரையில் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் பேசிய தமிழக முதலவர், உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய நாட்டினுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சி இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றது.
அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா வைரஸ் பரவல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய ஒரு தொற்று நோய். இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள், லட்சக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள்.
இதற்கு இதுவரை நோய்க்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில் இன்றைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விடா முயற்சி காரணமாக இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரிகின்ற மருத்துவ முன் களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசியை போடப்பட்டும்.
அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இந்த தடுப்பூசி போடப்படும். இதனை இன்றைய தினம் டெல்லியில் பிரதமர் துவக்கி வைத்து இருக்கிறார்கள்.இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரையில் இந்த தடுப்பூசி போடும் பணி இன்றைக்கு துவக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைக்கு தடுப்பூசி போடப்பட்டு பிறகு 28 நாள் கழித்து இரண்டாவது தடவை தடுப்பூசி போடவேண்டும் என தமிழக முதலவர் தெரிவித்தார்.