மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். அருகில் வந்து பார்த்தபோது மின்சார வயர் அறுந்து அவர் மீது கிடந்தது. தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில், அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியாமல் மின்கம்பியை அகற்ற முயன்றுள்ளார் விஜயலட்சுமி.
உடனே அவர் மீது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு, விஜயராஜ் மீது விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். தாயுடன் சென்ற மகள் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்து, ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் விரைந்து வந்து பார்த்தனர். மேலும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தை அணைத்தனர். இதைத்தொடர்ந்து குருவிகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.