ஏ.டி.எம்-மில் இருந்த பேட்டரிகள் மற்றும் யு.பி.எஸ்-ஐ திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ளே இருக்கும் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பின் அதிலிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ் மற்றும் 3 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் வங்கி சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வட மதுரையில் வசித்துவரும் பிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த யூ.பி.எஸ் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்ததோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான கேசவன் என்பவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.