டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், கோபிநாத் மற்றும் ரகுநாதன் என்ற மகன்களும் உள்ளனர். அதோடு சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள புதூர் ஏரி அருகில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் மணிகண்டன் ஆம்புலன்சில் பணிபுரிந்த காலம் முதல் இன்று வரை ஒரு நோயாளி கூட இறந்ததில்லை என்றும், ஆனால் மணிகண்டன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.