இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 57 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் 117 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து இறங்கிய விராட் கோலியும், ஹர்திக் பாண்டியாவும் நிலைத்து ஆடினர். விராட் கோலி 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேலும் தோனி 27 மற்றும் கேஎல் ராகுல் 11 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 352 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதனிடையே போட்டியை காண பிரபல தொழிலதிபரும் 9,000 கோடி வரி ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா போட்டியை காண ஓவல் மைதானம் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் போட்டியை காண வந்துள்ளதாக தெரிவித்தார். விஜய் மல்லையா அவரது மகன் சித்தார்த்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. வெளி நாட்டுக்கு தப்பி சென்ற அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.