பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்யாசமான போட்டியை நடத்தி அதில் பங்கேற்ற வாலிபர்களை அழ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான போட்டிகள் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஒரு போட்டியின் விதிமுறையானது, ஒருவர் முதலில் 10 பச்சை மிளகாய்களை சாப்பிட்டு, அதன் பின்னர் தோல் நீக்கப்பட்ட கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதாகும். அதில் பங்கு பெறும் நபர்கள் கடைசியாக எலுமிச்சம் பழத்தில் பாதியை சாப்பிட்டுவிட்டு, சிறிது சர்க்கரையையும் உட்கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றி அவற்றை சாப்பிட்டு முடித்த நபர்களை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தைரியமாக 8 வாலிபர்கள் பங்கேற்றனர். அப்போது வாலிபர்கள் பச்சைமிளகாயை சாப்பிட்டவுடன் அங்கு இருந்த சிறுவர்-சிறுமியர் சிரித்தபடியே போட்டியை ரசித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்த 1௦ பச்சை மிளகாயை சாப்பிட்ட ஒரு வாலிபர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். பொதுவாகவே பொங்கல் போட்டி என்றால் முறுக்கு கடித்தல், சைக்கிள் பந்தயம், ஓட்டப் பந்தயம் என்று இருக்கும் நிலையில், இந்த கிராமத்தில் இப்படி ஒரு வித்தியாசமான போட்டி வைத்து வாலிபர்களை அழ வைத்த சம்பவம் அங்கிருந்தவர்கள் ரசிக்கும்படியாக இருந்தது.