வயலில் அமைத்துள்ள மின்சார வேலியை மிதித்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடியம் இருளர் காலனியில் கன்னியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் முயலை வேட்டையாடுவதற்கு போகி பண்டிகையன்று காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள கூடியம் கிராம எல்லையில் ராஜேந்திரன் என்ற விவசாயி தனது வயலில் நெல் பயிர்களை பயிரிட்டு, அதனை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை தடுப்பதற்காக மின்சார வேலியை அமைத்து உள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள மின்வேலியே கடக்கும் போது கண்ணியப்பன் எதிர்பாராத விதமாக அதனை மிதித்ததால், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொன்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ராஜேந்திரன் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மது அருந்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.