கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் “கொங்குநாட்டு பூப்பறிக்கும்” திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர். அதன் பின் பெண்கள் அனைவரும் ஆற்றோரம் உள்ள ஆவாரம் பூக்களை பறித்து தாங்கள் கொண்டு வந்த கூடைகளில் எடுத்து சென்றனர். இதுவே “கொங்குநாட்டு பூப்பறிக்கும் திருவிழா” என்று கொண்டாடப்படுகிறது.