மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த இந்நாள் சரித்திரத்தின் பொன்நாள் ஆனது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் தொடர்ந்த போது குடும்பத்தில் நிலவிய வறுமை பள்ளிக்குச் செல்ல விடாமல் நாடகத்துறையை நோக்கி ஈர்த்தது. தேசபக்தி நாடகங்களில் புராண இதிகாச நாடகங்களிலும் நடித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்ட புரட்சித்தலைவர் 1936-ம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கி பல போராட்டைங்களைச் சந்தித்து 1947-ல் வெளிவந்த ராஜகுமாரி படத்தின் மூலம் பிரபலமானார்.
இயற்கையிலே இளகிய மனம் கொண்ட புரட்சித்தலைவருக்கு சோதனைகள் பல வடிவில் வந்தன. ஏற்ற இறக்கங்கள் திரைத்துறையில் இருந்தபோதும் அவரை நாடிவந்தருக்கு இல்லை எனாது வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார் . தமிழக நடிகர்களிலையே முதன் முதலாக நடிப்பிற்காகத் தேசிய விருதினை பெற்ற பெருமையை உடையவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர் நடித்த திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பாத்திரங்களை தெரிந்ததெடுத்து நாட்டை நல்வழிபடுத்தும் விதமாக நடித்ததால் மக்களின் ஆதர்சன நாயகனாக எக்காலமும் மக்கள் மனதில் நிற்கும் சக்தியாக திகழ்கிறார்.