பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் உள்நுழைவு தொட்டி உடைந்து அங்குள்ள சாலைகள் உள்வாங்குகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறை நகரில் மட்டும் 15 இடங்களில் உள்நுழைவு தொட்டி உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்நிலையில் தரங்கம்பாடியில் உள்ள சாலையில் உள்நுழைவு தொட்டி உடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தர்மபுரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் உடைந்து கால் டெக்ஸ் 4 ரோடு சந்திப்பில் உள்ள சாலையில் வட்டவடிவில் பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இடத்திற்கு யாரும் செல்லாத வகையில் அதனை சுற்றி தடுப்பு அமைத்து உள்ளனர். இவ்வாறு பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏற்பட்ட இந்த பள்ளத்தால் பூம்புகார், சீர்காழி சாலை போன்ற பகுதிகளில் கழிவுநீர் செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை சரி செய்யுமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.