ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய இந்த அதிரடி வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோத் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளதாக அந்த மாகாணத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு படைகள் எங்கள் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நாங்கள் என்ன தீவிரவாதிகளா எங்கள் மீதான குற்றச்சாட்டு என்ன என்று கேட்டுள்ளனர் .
ஆனால் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டுமே அறிக்கை வெளியிட்டதுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிம்ரோத் மாகாணத்தில் நடந்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்ற செய்தியை கேட்டதும் தான் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.