ஜெர்மன் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்டியை வைத்து விட்டு ஓடியதால் விமான நிலையத்திலிருந்து பொது மக்கள் அனைவரும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் திடீரென்று பெட்டி ஒன்றை வைத்துவிட்டு அல்லாஹுஅக்பர் என்று கத்தியபடி ஓடியதால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை மாலையில் கடவுச் சீட்டு சரி பார்க்கும் பிரிவிற்கு வந்த அந்த நபர் திடீரென்று தான் கொண்டுவந்த பெட்டியை அங்கே வைத்துவிட்டு அல்லாஹு அக்பர் என்று கத்தி விட்டு மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு விமான நிலையத்திலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அந்த பெட்டியை பரிசோதனை செய்த போது ஆபத்தான பொருட்கள் எதுவும் அந்தப் பெட்டியில் இல்லை என்று தெரிய வந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டரை மணிநேரம் மூடப்பட்டிருந்த அந்த பிரிவு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்திற்கான ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதுவும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாகாண காவல்துறையினருடன் மத்திய காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.