தமிழகத்தில் முக்கிய ஆளுமைகளாக விளங்கிய மறைந்த முதல்வர்கள் கருணாநிதி – ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று பலரும் பேசி வந்தனர். இந்த வெற்றிடத்தை சினிமா பிரபலங்களால் நிரப்ப முடியும் என்று கருதி அரசியலில் குறித்தான பரபரப்பை நடிகர்கள் தொடங்கினர். குறிப்பாக கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி களம் கண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம். இப்ப இல்லனா எப்பவும் இல்ல என்றெல்லாம் மூன்று வருட அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கிடையே கடந்த டிசம்பர் டிசம்பர் 30 இல் அரசியல் கட்சி அறிவிப்பு, ஜனவரியில் மாநாடு என்று தெரிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சார்ந்த காரணங்களால் அரசியலுக்கு வரவில்லை என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இதனால் காலகாலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினர். ரஜினியின் மக்கள் மன்றம் உத்தரவை மீறி சென்னையில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இருந்தாலும் ரஜினி முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதுபோன்ற போராட்டங்கள் நடத்த வேண்டாம். நான் அரசியலுக்கு வரவில்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னை மன வேதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்றெல்லாம் அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.
இதையடுத்து ரஜினியை நம்பினால் வேலைக்கு ஆகாது. ஆட்சி மாற்றமும் வேண்டாம், அரசியல் மாற்றமும் வேண்டாம். இப்ப இல்லனா எப்பவும் அரசியல் இல்லை என்ற ரஜினியின் வார்த்தையை எடுத்துக் கொண்டு திமுகவை நோக்கி ரஜினி மக்கள் மன்றத்தினர் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.
இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து மொத்தமாக 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைத்துக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வந்த், தேனி மாவட்ட செயலாளர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே வி எஸ் சீனிவாசன் முகஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.