இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பகல் பொழுதிலும் மிதமான சீதோசனம் நிலவியதால் உற்சாகமாக கொடைக்கானல் நகர் பகுதியில் உலா வந்தனர் சுற்றுலா பயணிகள். இந்நிலையில் நேற்று இரவு சாரலாக மீண்டும் மழை தொடங்கியது. இன்று காலை வரை மழை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் தங்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் வந்துள்ள நிலையில் பருவம் தவறி பெய்யும் மழையினால் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறையை சரிவர கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.