சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை அவிநாசி அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு புது பேருந்து நிலையம், அவிநாசி கைகாட்டி, ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினத்தன்று விடுமுறை என்பதால் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் வைத்து அருள் இருதயராஜ், முனீஸ்வரன், பழனி கண்ணன் ஆகிய 3 பேரும் மது விற்பனை செய்துள்ளனர்.
இதனை போலீசார் கண்காணித்து அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 136 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.