யானை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அட்டனை கிராமத்தில் பெரியசாமி மற்றும் சடையப்பன் என்ற இரு விவசாயிகள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை ஒட்டி சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும், பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அந்த தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதில் பரண் அமைத்து இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் மாலை 6 மணி அளவில் தோட்டத்திற்கு சென்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சுமார் நள்ளிரவு 12 மணியளவில் யானை பிளிரும் சத்தம் கேட்டதால் சடையப்பன் பரணிலிருந்து கீழே வந்து டார்ச் லைட்டை எடுத்து பார்த்தபோது, அங்கு ஒரு யானை நின்று கொண்டிருந்ததைக் கண்டார். இதனையடுத்து யானை கீழே நிற்பதை பெரியசாமி சடையப்பனிடம் கூற, அவரும் பரணிலிருந்து கீழே இறங்கி வந்து சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். அதன் பின் யானை காட்டுக்குள் சென்று விட்டது என நினைத்து அவர்கள் சிறிது தூரம் சென்றனர். ஆனால் யானை அங்குள்ள ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு, இருவரும் சென்ற போது அவர்களை பின்னால் துரத்திக் கொண்டு ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் தப்பித்து ஓடினர். ஆனால் யானையிடம் பெரியசாமி சிக்கிக்கொண்டார். இதனையடுத்து பெரியசாமியை துதிக்கையால் தூக்கி வீசிய யானை, காலால் மிதித்து கொன்றுவிட்டது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக சடையப்பன் ஓடும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டார். அப்போது அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள தோட்ட விவசாயிகள் சடையப்பனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக வனதுறையினருக்கும், கடம்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் வனத்துறையினர் பெரியசாமியின் மனைவியிடம் ரூபாய் 50 ஆயிரத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும் யானை மிதித்து தோட்ட காவலுக்கு சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.