தமிழக ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் அதிமுகவினரால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதன் பின்னர் சென்னை அசோக் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது எந்த பணியும் செய்யவில்லை. தற்போது வேண்டுமென்றே அவர் அதிமுகவின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்து வருகிறார் என்றும் நீட் தேர்வு ரத்து செய்யுமாறு ஸ்டாலின் மனு கொடுக்கிறார். ஆனால் அதைக் கொண்டு வந்தது திமுகதான் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் அதிமுக அரசு வீடு கட்டித்தரும். வருகின்ற 5 வருடங்களில் வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.