நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ,சாந்தனு, அர்ஜுன் தாஸ் ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப்பின் திரையரங்கில் வெளியான முதல் படம் என்பதால் ரசிகர்களுக்கும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நடிகர் விஜயின் படங்கள் இந்திய அளவில் வசூல் சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது மாஸ்டர் படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது ‘மாஸ்டர்’ . இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.