திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நயன்தாரா குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். நான் தவறாக பேசவில்லை. நான் அப்படி பேசியிருந்தால் பத்திரிகையாளர்கள் எனக்கு கண்டனம் தெரிவித்திருப்பார்கள். நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் தவறாக பேசியிருந்தால் நான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் நான் கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி மீண்டும் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அப்போது அவரது அருகில் கடம்பூர் ராஜும் உடனிருந்தார். இதையடுத்து ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். அதிமுகவில் சேர வேண்டும் என்ற முடிவை நான் 2 நாட்களுக்கு முன்பு தான் எடுத்தேன். மேலும் திமுகவில் தான் இரட்டைதலைமை பிரச்னை உள்ளது என்றும், அதிமுகவில் 18 ஆண்டுகாலமாக இருந்துள்ளேன், ஆனால் திமுகவில் எனக்கு திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.