ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 115.2 ஓவர்களில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் லபுசேன் 108 ரன்களும்,பெயின் 50 ரன்களும்,கிரீன் 47 ரன்களும்,வேட் 45 ரன்களும் எடுத்தனர்.
நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர் . இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்தது. அதில் தாகூர் 67 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்தார்கள். ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன்களை எடுத்து குவித்து வந்தது. நான்காவது நாளில் தேநீர் இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி 66.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 55 ரன்கள்,வார்னர் 48 ரன்கள் எடுத்தார்கள்.
இதற்கு பிறகு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை முடிந்த பிறகு ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லயன் 13 ரன்களில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 9 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக சிராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.