அருணாச்சல பிரதேசத்தில் சீனா 1௦1 வீடுகளைக்கொண்ட புதிய கிராமத்தை உருவாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினையானது தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டதில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், சீனா பின் வாங்குவதில் தயக்கம் காட்டுகிறது. இந்நிலையில் சீனா அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையில் 1௦1 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்து விட்டது. இந்த கிராமமானது இந்திய பகுதியுடன் சேர்த்து 4.5 கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளதால் இது இந்தியாவிற்கு மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு வீடுகள் கட்டுவதற்கான செயல்பாடுகள் எதுவும் தெரியாத நிலையில், தற்போது நவம்பர் மாத செயற்கை கோள் படத்தில் அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்திய எல்லையில் சீனா கட்டுமான வேலைகளை செய்து வருகிறது. அதோடு இந்திய அரசாங்கமும் பாலங்கள் கட்டுதல் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை அதிகரித்து எல்லைப் பகுதியில் உள்ள மக்களை இணைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா எல்லை அருகே அதிகமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை இந்திய எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவில் உள்ள கிராமம் அருகே தற்போது இந்தியா எந்த ஒரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.