ஒழுங்காக படிக்கவில்லை என கூறி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை தீ வைத்து கொளுத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஹட்பல்லி என்ற பகுதியில் பாலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சரண் என்ற ஒரு மகன் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட காரணத்தால் தனது வீட்டிலேயே இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சரண் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரண் தனது தாயாருடன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, மதுபோதையில் வந்த அவரது தந்தை சரணை கடைக்கு சென்று பீடி வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனும் தனது தந்தைக்கு பீடி வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் டிவி பார்க்க அமர்ந்து விட்டான். இதனால் கோபமடைந்த பாலு முந்தைய வகுப்புகளில் ஏன் சரியாக படிக்கவில்லை என்று கூறி தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அந்த சிறுவனை அடித்துள்ளார்.
இதனை தடுக்க வந்த சிறுவனின் தாயாரையும் பாலு அடித்து விட்டார். இதனையடுத்து பாலு தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுவனின் உடலில் ஊற்றி விட்டார். அதன்பின் சிறுவர் வாங்கி வந்த பீடிக்கு தீப்பற்ற வைத்து அந்த தீக்குச்சியை அந்த சிறுவன் உடலில் போட்டு விட்டார். இதனை பார்த்த அவரது தாயார் சத்தம் போட்டபோது, அதனை கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்போது அந்த சிறுவன் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.