டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் டயர்களை தனியாக ஒரு குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் விற்பனைக்காக டயர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது, சேமிப்பு குடோனில் திடீரென புகை கிளம்பி விட்டது. இதனை தொடர்ந்து தீயானது மளமளவென பரவி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை முழுவதுமே புகையால் சூழ்ந்து காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சிப்காட், மற்றும் தேர்வாய் போன்ற 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்பட்ட உடனே தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் தீப்பிடிக்காத டயர்களை அப்புறப்படுத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி, பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீத்தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதோடு அந்த தொழிற்சாலைக்கு செல்லும் பகுதியில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு சீல் வைத்து அடைத்தனர்.
அதன் பின் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசமாகின. அதோடு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் இரண்டு சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்குகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சி செய்து அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.