பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டசபையில் பசுவதை தடை சட்டம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் அளிக்காத சமயத்தில், பசுவதை தடைக்கு மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த அவசர சட்டமானது கர்நாடகத்தில் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கால்நடை துறை மந்திரி கூறியதையடுத்து, பசுவதை தடை சட்டம் நேற்று அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்தை மீறி மாடுகளை கொன்றால் குற்றவாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
எனவே வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அவற்றை கோசாலைகளில் அரசின் அனுமதியுடன் விட்டு விடலாம் எனவும், உரிய முன் அனுமதி பெற்றுக்கொண்டு 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய நோக்கத்திற்காக மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றால் அரசிடம் உரிய அனுமதியை பெற்று வாகனங்களில் போதிய இட வசதியுடன் அழைத்து செல்ல வேண்டும். இதனையடுத்து விவசாய பணிகளுக்காக 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இரண்டு மாடுகளை கொண்டு சென்றால் எந்த வித அனுமதியும் வாங்க தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்.