தமிழகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பாமாயில், சூரியகாந்தி எண்ணெயின் விலை சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் லிட்டருக்கு 76 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் 95 ரூபாய்க்கும் விற்பனையானது. பண்டிகை சீசன் துவங்கியதால் கடந்த 10 மாதங்களில் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து, 145 ரூபாய்க்கும், பாமாயில் விலை லிட்டருக்கு 45 ரூபாய் உயர்ந்து 123 ரூபாய்க்கு விற்பனையானது.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் பண்டிகை சீசன் நிறைவடைந்த காரணத்தினால், உள்ளூரில் எண்ணெய் வித்துக்கள் அறுவடையும் துவங்கியுள்ளது. 10 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக நேற்று பாமாயில் லிட்டருக்கு 5 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் விலை மூன்று ரூபாயும் சரிந்தது. நேற்று முன்தினம் சூரியகாந்தி எண்ணெய் உள்ளூர் தயாரிப்பு லிட்டர் 145 ரூபாயிலிருந்து 142 ரூபாய்க்கும், பிரபல நிறுவனங்களின் தயாரிப்பில் 142 ரூபாயிலிருந்து 139 ரூபாய்க்கும் விற்பனையானது. பாமாயில் உள்ளூர் தயாரிப்பு லிட்டர் 123 ரூபாயிலிருந்து 118 ரூபாய்க்கும், பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு லிட்டர் 117 ரூபாயிலிருந்து 112 ரூபாய்க்கும் விற்பனையானது.