மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து ஆபாசமான வார்த்தைகளை பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான ராஜலட்சுமி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது போராட்டத்தில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் திமுகவினரை கடுமையாக தாக்கி பேசியதோடு, உதயநிதி ஸ்டாலினின் நாக்கை வெட்ட வேண்டும் என்று கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் பேசிய அவர் பெண்களை இழிவுபடுத்தி திமுகவினர் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் பேசிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் திமுகவினரை நிராகரிக்க வேண்டும் என்றும் தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வருவாய் மற்றும் வேளாண்மைத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட்டு வருகிறார்கள். எனவே விரைவில் அவர்களுக்கு நிவாரணம் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.