அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா எப்படி இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு
நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் பதவியேற்ற பிறகு தான் அதிகாரப்பூர்வமாக அவர்களது பணியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் பதவியேற்கும் விழா இன்று வாஷிங்டன் டிசியில் வைத்து நடைபெற இருக்கிறது. சட்ட விதிமுறைகளின்படி இன்று நடைபெற உள்ள இந்த விழா 11:30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு அதிபர் மற்றும் துணை அதிபர் பதவி ஏற்க உள்ளனர்.
உறுதிமொழிகளை கூறி முடித்து 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்பார். பதவி ஏற்றதை தொடர்ந்து ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பார். அதன் பிறகு நான்கு வருடங்கள் அவர்தான் வெள்ளை மாளிகையில் இருப்பார். ஒவ்வொரு முறை பதவியேற்கும் முறையும் விழா அன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் இம்முறை ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற வன்முறையினால் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏராளமான காவல்துறை அதிகாரிகளும் ரகசிய ஏஜெண்டுகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்விழாவை முன்னிட்டு வாஷிங்டன் டிசியில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மில்லர் என்பவர் கூறுகையில் இந்த பதவியேற்பு விழாவிற்காக சுமார் ஒரு வருடங்கள் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.