Categories
தேசிய செய்திகள்

“கொள்கையை திரும்ப பெற வேண்டும்” … வாட்ஸ்அப்புக்கு மத்திய அரசு கடிதம்..!!!

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றியது. அதனை திரும்பப் பெறும் படி மத்திய அரசு வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது.

புதிய தனியுரிமைக் கொள்கை மூலம் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

இதனால் புதிய கொள்கையை செயல்படுத்துவதை மே 15-க்கு ஒத்திவைத்திருக்கிறது. அத்துடன் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விளக்கமளித்தது. அதில் “தனிப்பட்ட உரையாடல்களை வாட்ஸ்ஆப் படிக்கவோ அல்லது கவனிக்கவோ செய்யாது. அவை என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் கொண்டவை. வாட்ஸ்ஆப் உங்கள் தொடர்புகளை பேஸ்புக்கிற்கு வழங்காது” என்று கூறியிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் தலைமைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்திய பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சமீபத்திய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை திரும்பப் பெறுமாறும் கேட்டுக்கொண்டது.

மேலும் வாட்ஸ்அப்பிடம் பல தகவல்களை கேட்டுள்ளனர். எந்தெந்த வகை தகவல்களை இந்திய பயனர்களிடமிருந்து பெறுகிறீர்கள், பயனர்களிடம் பெறப்படும் அனுமதிகளின் விவரங்கள், செயலியை பயன்படுத்துவதை பொறுத்து பயனர்களை வகைப்படுத்தி உள்ளீர்களா, தனியுரிமை கொள்கையில் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகிய விவரங்களை வழங்கும் படி கோரியுள்ளது.

Categories

Tech |