கல்குவாரி குட்டையில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த கல்குவாரி இயங்காத நிலையில் அங்கு ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் தமீம் அன்சாரி, அவரது மாமன் மகள் சமிதா மற்றும் அவரது தோழி ஏஞ்சல் 13 பேர் அந்த கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். இதனையடுத்து அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது, அந்த பள்ளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மூன்று பேரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெரிய கடல் போல் காட்சியளிக்கும் இந்த ராட்சச பள்ளத்தில் ஓர் எச்சரிக்கை பலகை கூட வைக்காததால் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் இந்த குட்டையில் மூழ்கி பலியாகும் சம்பவம் தொடர்ந்து கொண்டே வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த அபாயமான குட்டையில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.