சிறப்பு வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 லட்சத்து 4 ஆயிரத்து 5௦௦ ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், கருணாநிதி, சக்திவேல் போன்றோர் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டுனர்கள் சீருடை அணிந்து உள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றனரா என்றும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
அதோடு போக்குவரத்து சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று சோதனை செய்தனர். இதனையடுத்து சட்டவிதிகளை மீறி பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்து அதனை நீக்கி அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக ரூபாய் 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, எட்டு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர்.