தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது, ” மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ. டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபின குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குமிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை முதல்கட்டமாக, 100 மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்வி உதவித்தொகை பெற, புதிதாக 2020-21க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.