தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 8,97,694 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன் பிறகு இறுதி வாக்காளர் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 8,97,694 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 18 முதல் 19 வயது சேர்ந்த 4.80 லட்சம் ஆண்கள், 4.16 லட்சம் பெண்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இறுதி வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் 74 பேர் இணைக்கப்பட்டுள்ளன.