சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, அவரின் கன்னத்தை கடித்து குதறிய ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த ஊழியருக்கு 50 வயதாகும். அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான அவர் என் மீது ஆசை கொண்டார். மேலும் என்னுடன் சேர்ந்து வாழுமாறு அவர் தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு நான் மறுத்த காரணத்தினால் பொங்கல் பண்டிகை தினத்தன்று இரவு 7 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டார். போதையில் இருந்த அவர் என் கன்னத்தை கடித்து குதறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கண்ணத்தில் கடித்ததால் காயமடைந்த நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் உதவி கமிஷனர் முத்துப்பாண்டி, சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு ஆகியோர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.