மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை “பராக்கிரம” தினமாக கொண்டாட முடிவெடுத்துள்ளது.
தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 125-வது பிறந்த நாளான இந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளார்.
அவரது அணையாத விடுதலை உணர்வை போற்றும் வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி “பராக்கிரம” தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்கள் நேதாஜியை போன்று கடினமான காலங்களில் உறுதியாக செயல்பட வேண்டும்.
மேலும் நாட்டுப்பற்றை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கும் இது ஊக்கமாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிகழ்ச்சி குறித்து முடிவெடுப்பதற்கும், கொண்டாட்டங்களின் போது மேற்பார்வை இடுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.