நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு, ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு சட்டமன்றம் நடக்கிறது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நான் உட்கார்ந்து இருந்தபோது, ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்காருகிறார். உட்கார்ந்த சில மாதங்களில் அவர் பதவியை பறித்து விட்டார், சசிகலா. அதற்கு காரணம் என்னை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான். அதற்கு பிறகு சசிகலா, தானே முதலமைச்சராக வருவதற்கு முடிவு செய்தார். அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்தது.
அம்மையார் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இப்படி ஒரு தண்டனை. ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்டார். அதனால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. அது வேறு. ஆனால் மற்ற 3 பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும். வரும் 27ம் தேதி தான் வெளியே வரப் போகிறார் என்பது உங்களுக்கு தெரியும். வந்ததற்குப் பிறகு பழனிசாமி அவர்கள் பொறுப்பில் இருப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குறி.
அந்த பிரச்சினையை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். அதற்குப் பிறகு சசிகலா சிறைக்கு செல்ல வேண்டும். அப்போது யார் முதலமைச்சராக வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் கீழே ஏதோ ஊர்ந்து வந்திருக்கிறது. எடப்பாடி அவர்கள் ஊர்ந்து வந்து கொண்டிருந்தார்.எடப்பாடி என்று சொல்லக்கூடாது. எடப்பாடி என்று சொன்னால் அந்த ஊருக்கு அவமானம். இ.பி.எஸ். என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் பழனிசாமி என்று சொல்ல வேண்டும்.
உடனே அவரை தட்டிக்கொடுத்து, நீங்கள் தான் இனிமேல் முதலமைச்சர் என்று அறிவித்து விட்டுச் சென்று விட்டார் சசிகலா. ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்ம மரணத்தை கண்டுபிடிக்க நீதி விசாரணை தேவை” என்று சொன்னார் என முக.ஸ்டாலின் நினைவு கூறினார்.