தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை 2:30 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 5:30 மணியளவில் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது இறந்திருந்தார்.
முதற்கட்ட விசாரணையில் தடுப்பூசிக்கும், மரணத்துக்கும் தொடர்பில்லை என தோன்றுவதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். வழிகாட்டுதல்களின்படி, மருத்துவர்கள் குழுவால் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். தடுப்பூசிக்கு பிறகான பாதக விளைவுகளை கண்காணிக்கும் மாவட்ட அளவிலான குழு இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறது. மாநில மற்றும் மத்திய குழுவுக்கு அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகே இது தடுப்பூசியின் விளைவா அல்லது தற்செயலா என்பது தெரியவரும்.