சசிகலாவை பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர்.
அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதனால் பெங்களூரு சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சசிகலாவுக்கு மீண்டும் சுவாச கோளாறு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சசிகலாவுக்கு சரியாக சிகிச்சை தரப்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சசிகலாவிற்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் சசிகலாவை பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்து தெளிவான தகவல் தெரிவிக்கவும் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.