260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டப்பட்டிருந்ததும், இதற்காக கேரளாவில் இருந்து தேனி வழியாக மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்ல இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர்களிடமிருந்து 260 கிலோ கஞ்சா, 20 பாலிதீன் கவர்கள், 2 எடை மிஷின்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் நவாஸ்கான் அவருடைய மகன் வாசிம்கான், அப்துல்பாசித் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.